மையத்தைப் பற்றி
ஒருவர் தன் உள்நிலை அமைதியையும், ஆரோக்கியமான உடலைக் கொள்வதின் ஆனந்தத்தையும் உணர்வதற்காக, சத்குருவால் வடிவமைக்கப்பட்டு, துவக்கப்பட்டதுதான் ஈஷா புத்துணர்வு மையம். .
ஒரு மனிதரின் உயிர்சக்திகளுக்குத் தகுந்த அதிர்வையும், சரியான சமநிலையையும் அளிக்குமாறு மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட தனித்துவமும், சக்திநிலையும் ஒருங்கே அமையப் பெற்ற நிகழ்ச்சிகளை ஈஷா புத்துணர்வு மையம் வழங்குகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நாட்பட்ட நோய்களைத் தவிர்க்கவும் மற்றும் வேரோடு அறுக்கவும், இத்தகைய சமநிலை அவசியத் தேவையாக உள்ளது.
கிருமிகளினால் ஏற்படும் தொற்று வியாதிகள் அல்லது மரபுவழிக் குறைபாடுகள் நீங்கலாக, இன்றைய ஆரோக்கியக் குறைவிற்கு, மன அழுத்தம் மிகப் பரவலான காரணமாக உள்ளது. நவீன வாழ்க்கை முறையின் வேகமான ஓட்டம், எப்போதும் 'போரிடு அல்லது பறந்து விடு' என்கிற நிலையிலேயே நம்மை நிறுத்தி வைத்துள்ளது. நவீன வாழ்க்கை முறையின் ஆபத்துகள் அதாவது உணவு மற்றும் சுற்றுச்சூழல் நச்சுத்தன்மை, பெருத்த இரைச்சல், மின் காந்தக்கதிர் போன்றவைகள், தீவிரமான, நாட்பட்ட, சீர்கேடான மற்றும் பெயர் தெரியாத நோய்களுக்கு நம்மை உட்படுத்துகின்றன. இவற்றில் நாம் போதிய கவனமின்றி இருந்தால், மிகவும், அபாயகரமான சுகவீனங்களை நம்முள் ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்திற்கு நிரந்தர இழப்பை உண்டு பண்ணக்கூடும்.
ஈஷா புத்துணர்வு மையமானது, உயிர்சக்திகளுக்குத் தேவையான அதிர்வையும், சரியான சமநிலையையும் அளிக்கும் நோக்கத்தில், நாட்பட்ட வியாதிகளை அடியோடு தீர்க்கவும், தவிர்க்கவுமான சக்திமிக்க வழிமுறைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆங்கில வழி மற்றும் பிற வைத்திய சிகிச்சை முறைகள், பண்டைய இந்திய மருத்துவ முறைகள் உள்ளடக்கியதாகவும் விஞ்ஞானப்பூர்வமாகக் கட்டமைக்கப்பட்டதாகவும் இங்குள்ள சிகிச்சை முறைகள் விளங்குகின்றன.
ஆயுர் ரசாயனா இன்டென்சிவ், ஆயுர் சம்பூர்ணா மற்றும் யோக மார்கா போன்று இங்கு வழங்கப்படும் சிகிச்சை நிகழ்வுகள் - யோகப் பயிற்சி மற்றும் யோக முறைகளோடு இணைந்த உணவுக் கட்டுப்பாடு, மசாஜ், மூலிகைக் குளியல்கள் மற்றும் புத்துணர்வு டானிக்குகள், சித்த மருந்துகள் (ஆயுர்வேத மருந்துகளைவிடப் பழமையான பாரம்பரிய மருத்துவம்) மேலும் பிரத்யேகமான மற்ற மாற்று முறை மருந்துகள் (மருத்துவரின் பரிந்துரைப்படி) மற்றும் அதனோடு இணைந்த சிறப்பு வழிமுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
பங்கேற்பாளர்களின் அனைத்துவித தேவைகளையும், ஈஷா புத்துணர்வு மைய தன்னார்வத் தொண்டர்கள் அன்பும், அக்கறையும் கொண்டு கவனிக்கும் தன்மையானது புத்துணர்ச்சி மையம் வழங்கும் வழிமுறைகளுக்கு மகத்தான முறையில் உறுதுணை செய்கிறது.
புனிதமான வெள்ளியங்கிரி மலைகளின் அழகு பொருந்திய சூழலுக்குள் நீங்கள் வந்தடையும் கணம் முதற்கொண்டே உங்களுக்குள் புத்துணர்வு துவங்கிவிடுகிறது. ஈஷா யோக மையம் மற்றும் தியானலிங்கத் திருக்கோவிலின் அமைதியான சூழல், ஆழ்ந்த குணப்படுத்துதலை ஒருவருக்குள் ஏற்படுத்துகிறது. இங்கு வருகை தந்து இளைப்பாறி, புத்துணர்வு பெற்றுச் செல்லுங்கள்