"ஈஷா என்றால் படைப்புகளின் ஆதாரம் என்று பொருள். கிரியா என்றால் படைப்பின் ஆதாரத்தை நோக்கிய உள்முகப் பயணம். ஈஷா கிரியா என்பது பொய்மையிலிருந்து உண்மைக்கு இட்டுச் செல்லும் மிக எளிமையான, ஆனால் சக்தி வாய்ந்த கருவியாகும்."

- சத்குரு

நல்வாழ்விற்கான தொழில்நுட்பம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

 • இந்த தியானத்தினால் ஏற்படும் பலன்கள் என்ன?
 • இந்த தியானத்தின்போது என்ன நிகழ்கிறது என துல்லியமாகக் கூறுங்களேன்?
 • இந்த தியானம் எதற்காக இணையதளம் மூலமாக வழங்கப்படுகிறது?
 • சுவாசத்தின் முக்கியத்துவம் என்ன? இப்படி சுவாசிப்பதால் ஆரோக்கியம் தவிர வேறு நன்மைகள் உள்ளனவா?
 • முகத்தை லேசாக மேல் நோக்கி வைப்பது எதற்காக?
 • நான் 'ஆ' சப்தம் உச்சரிப்பதால் என் மேல் ஏற்படும் தாக்கம் என்ன?

உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்

 • சத்குரு: தியானம் செய்வதற்கான தேவைதான் என்ன? இந்தப் பிறப்பை நீங்கள் உங்கள் விழிப்புணர்வால் ஆரம்பிக்கவில்லை. அது "தானாக" உங்களுக்கு நிகழ்ந்த ஒன்று. நீங்கள் பிறந்தபோது உங்கள் உடல் மிகச் சிறிதாக இருந்தது. தற்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது. எனவே உடல் என்பது நீங்கள் சேகரித்தது என்பது தெளிவாக உள்ளது. உடல் நீங்கள் சேகரித்த ஒன்றுதான். நீங்கள் "என் உடல்" என்று எதை அழைக்கிறீர்களோ, அது வெறும் உணவுக் குவியல்தான். அதேபோல் "என் மனம்" என்று நீங்கள் எதை அழைக்கிறீர்களோ, அது உங்களுடைய எண்ணக் குவியல்தான்.

  நீங்கள் எதைச் சேகரித்தாலும் அது உங்களுடையதாக இருக்கலாம், ஆனால் அது 'நீங்கள்' ஆக முடியாது. நீங்கள் சேகரித்துள்ளீர்கள் என்பதே, அதை வேறெங்கிருந்தோ நீங்கள் திரட்டி உள்ளீர்கள் என்பதைத்தான் உணர்த்துகிறது. இன்று உங்கள் எடை 70கிலோ வரை இருக்கலாம். ஆனால் அதே எடையை 60 கிலோவாக குறைக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியும். அதற்காக நீங்கள் தொலைத்த அந்த 10 கிலோ எடையைத் தேடி நீங்கள் வேறெங்கோ செல்வதில்லை. ஏனெனில் அது நீங்களாக சேகரித்ததுதான். நீங்கள் அதனை இழந்த உடனேயே அது காணாமல் போய்விடுகிறது. அதே போல், உங்கள் மனமும் எண்ணப்பதிவுகளின் குவியல்தான்.

  நீங்கள் அல்லாத ஏதோ ஒன்றுடன் உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும்போதே உங்களுடைய புரிதல் திரிந்துவிடுகிறது. வெளியிலிருந்து சேகரித்த இந்த உடலையே "நான்" என நீங்கள் உணரத் தொடங்கி விட்டால், உங்கள் மனத்தில் உள்ள பதிவுகளையே "நான்" என உணரத் தொடங்கி விட்டால், வாழ்வை உள்ளது உள்ளபடியே உங்களால் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையை, உங்கள் பிழைப்புக்கு எப்படி வசதியோ அப்படித்தான் புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை உண்மையில் எப்படி உள்ளதோ, அப்படி புரிந்து கொள்ள மாட்டீர்கள்.

  மனிதனாக பிறந்த பிறகு பிழைப்பு என்பது மிக முக்கியம்தான், ஆனால் பிழைப்பு மட்டுமே போதாது. இந்த பூமியில் உள்ள பிற உயிர்களைப் போல் நீங்கள் இங்கு பிறந்திருந்தால், வயிறு நிறைந்தால் உங்கள் வாழ்க்கை நிறைவு பெற்றிருக்கும். ஆனால் நீங்கள் இங்கு மனிதனாக வந்த பிறகு, வாழ்க்கை வெறுமனே உயிர் வாழ்வதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், பிழைப்பிற்கு தேவையானவை பூர்த்தி செய்யப்படும்போதுதான் ஒரு மனிதனின் வாழ்க்கை தொடங்குகிறது.

  தியானம் உங்களுக்கு ஒரு உள்நிலை அனுபவத்தைத் தரும். அப்போது நீங்கள் யார் என்பதற்கும், எது உங்களுடையது என்பதற்கும் இடையே ஒரு இடைவெளி உண்டாகும். உங்களுக்கும், நீங்கள் சேகரித்தவற்றுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. இப்போதைக்கு இந்த இடைவெளியை தியானம் என்று வைத்துக் கொள்வோம்.

  இந்த தியானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன? இதன் மூலம் மிகத் தெளிவான புரிதலை ஒருவர் அடைய முடியும். நீங்கள் வாழ்வை உள்ளது உள்ளபடியே ஒரு சிதைவும் இல்லாமல் பார்ப்பீர்கள். தற்சமயம், உங்களுடைய புரிதல் எந்த அளவிற்கு தெளிவாக உள்ளதோ, அந்த அளவிற்கு மட்டுமே உங்களால் இந்த உலகில் செயல்பட முடியும். ஒருவர் தனது இலட்சியத்தில் ஒரு தெளிவு இல்லாமல் வெறும் தன்னம்பிக்கையுடன் மட்டும் இந்த உலகை எதிர்கொள்வதாக இருந்தால், அவர் வெறும் குழப்பத்தை உருவாக்கும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பார். எதிலெல்லாம் தங்களுக்குப் புரிதல் இல்லையோ, அப்போது அதைப்பற்றி வெறும் தன்னம்பிக்கையை மட்டுமே மக்கள் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு விஷயத்தில் தெளிவு இல்லாதிருக்கும்போது, சில மாற்று வழிகளைக் கொண்டு ஈடு செய்துவிட மக்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் தெளிவுக்கு வேறு மாற்றே இல்லை.

  இதைப் புரிந்து கொண்டால், நீங்கள் இயல்பாகவே தியானநிலையை அடைந்து விடுவீர்கள். எந்த தடுமாற்றமும் இல்லாமல், மிகக் குறைந்த முரண்பாடுகளுடனே வாழ்வை நடத்த விரும்புவதால் தேவையற்றதை விலக்கிவிட்டு, வாழ்வை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்ப்பீர்கள்

 • சத்குரு: இந்த கிரியா உங்களுக்கும் உங்கள் உடலுக்கும், உங்களுக்கும் உங்கள் மனத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளியை உருவாக்குகிறது. உங்கள் வாழ்வில் போராட்டம் ஏதேனும் இருந்தால், அதற்குக் காரணம் உங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் சில விஷயங்களில் உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொவதால்தான்.

  எனவே, தியானத்தின் சாரமே, உங்களுக்கும், நீங்கள் மனம் என அழைப்பதற்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்துவதுதான். நீங்கள் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உங்கள் மனத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உங்கள் மனத்திற்கும், உங்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொண்டால், உங்களுக்குள் துன்பமே வராது. இதுவே துன்பத்திற்கெல்லாம் முடிவாக இருக்கும்.

  நீங்கள் தியானம் செய்யும்போது, உங்களுக்கும் உங்கள் மனத்திற்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்படுகிறது. அதனால் நீங்கள் அமைதியாக உணர்கிறீர்கள். ஆனால் கண்களை திறந்ததும் அக்கணமே மீண்டும் உங்கள் மனதுடன் சிக்கிப் போகிறீர்கள்.

  நீங்கள் தினமும் தியானம் செய்து வந்தால், ஒரு நாள் வரும்! அப்போது, நீங்கள் கண்களை திறந்திருந்தாலும், நீங்களும் உங்கள் மனமும் தனித்தனியே இருக்கும் நிலை வரும். இதுவே துன்பத்திற்கெல்லாம் முடிவு. உங்கள் உடலுடனும் மனத்துடனும் நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் படைத்தலின் மூலத்துடன் இயல்பாகவே தொடர்பில் இருப்பீர்கள். இது நிகழ்ந்தால், அருள் நிகழும்.

  அதாவது உங்களுடைய முழு கர்ம மூட்டையை - கடந்து போன அல்லது விழிப்புணர்வில் இல்லாத உங்களுடைய மனதை - தள்ளி வைக்கிறீர்கள். உங்கள் கர்ம மூட்டை உங்கள் மேல் எந்த தாக்கத்தையும் எற்படுத்த இயலாது. கடந்த காலம் உங்கள் மேல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாதபோது, வாழ்க்கை ஒரு பெரும் வாய்ப்பாக மாறிவிடுகிறது.

  உங்கள் வாழ்வின் ஒவ்வொரு மூச்சும் மகத்தான சாத்தியமாய் அமையும். ஏனெனில், உங்கள் நிகழ்கால இருப்பின் மேல் கடந்த காலம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இப்படி நீங்கள் இங்கே அமர்ந்தால், ஒரு பரிபூரண உயிராக இருப்பீர்கள். முயற்சிகள் எதுவும் இல்லாமலே வாழ்க்கை நடக்கும்.

 • சத்குரு: சில வருடங்களுக்கு முன், நான் வெறுமனே அமர்ந்திருந்த போது, எந்த முயற்சியும் இல்லாமல், எக்காரணமும் இல்லாமல் போரானந்தத்தில் மூழ்கிப் போனேன். "இதென்ன பெரிய விஷயம்? என்று அப்போது நினைத்தேன். இந்த இடத்தில் அமர்ந்த நிலையிலேயே, நான் பேரானந்தத்தில் திளைக்கிறேன். இந்த உலகத்தையே பேரானந்தம் அடையச் செய்வது பெரிய விஷயமா?,'' என அப்போது தோன்றியது. இது நடந்து 30 வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் மக்கள் இன்னமும் தங்கள் துயரங்களை விட்டு வெளியே வரவில்லை. இதுவரை நாம் சில கோடி மக்களை தொட்டுள்ளோம், ஆனால் இதுவே முழு உலகமும் அல்ல. உலகம் என்றால் என்னைப் பொறுத்தவரை 700 கோடி மக்கள்.

  இன்று காலம் செல்லச் செல்ல, சமூகத்தில் தான்தோன்றித்தனம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏனெனில் இன்று பொருள்தன்மை சார்ந்து என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையனைத்தும் செய்தாயிற்று. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குத் தெரியவில்லை. எனவே இப்போது விதவிதமாக சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்கள் அல்லது தலை முதல் கால் வரை விதவிதமான வர்ணங்களில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். வேறெதாவது புதிதாகச் செய்ய முடியுமா? புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் மேன்மேலும் வாழ்க்கைக்கு எதிர்மறையான செயல்களை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

  இன்று சமூகம் ஆன்மீக செயல்முறைக்குத் தயாராய் கனிந்துள்ளது. அளவுக்கு அதிகமாகவே கனிந்து தயாராக உள்ளது. இந்தத் தருணத்தில் ஆன்மீகத்தை வழங்கவில்லை என்றால், இச்சமூகம் வெடித்துச் சிதறிவிடும். மதம் சாராத, எந்தவொரு நம்பிக்கை முறையையும் சாராத, தத்துவம் அல்லாத, பரந்துபட்ட ஒரு ஆன்மீக செயல்முறை வழங்கப்பட வேண்டும். ஒரு எளிமையான செயல்முறையிலேயே, அவர்களை உள்நோக்கி எடுத்துச் செல்வதாய் அது அமைய வேண்டும். இன்றுவரை, இங்கும் அங்குமாக சிறிய அளவில் மக்கள் ஆன்மீகத்தால் தொடப்பட்டுள்ளனர். ஆனால் இது பெரிய அளவில் நடைபெறவில்லை. இன்றோ, தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. நம்மால் இதனை நிகழச் செய்ய முடியும்.

  இந்தத் தலைமுறையில் நாம் செய்யக்கூடிய செயல்களில் இதுவே மிக முக்கியமானதாக இருக்கும். மனித இனத்தின் விழிப்புணர்விற்காக மிகப்பெரிய அளவில் செய்யப்பட்ட, தனிப்பெருமை வாய்ந்த விஷயமாய் இது விளங்கும்.

  வெளிச் சூழ்நிலைக்காக நிறைய செயல்களை செய்து கொண்டிருந்தால் பிறகு இந்த பூமியே சிதைந்து காணாமல் போய்விடும். மனிதர்கள், தங்கள் சக்தியை உள்நோக்கித் திருப்பி உள்நிலையில் வளர்வதற்கான நேரம் வந்துவிட்டது. மனிதர்கள் உள்நிலையில் வளரும்போது வெளியுலகிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தாமல் வாழ்வார்கள். அதற்காக நாம் நிறைய வேலைகள் செய்தாக வேண்டும். உள்நிலைப் பரிமாணத்தை நாம் துவக்கி வைக்கவில்லை என்றால் வெளிச்சூழ்நிலைக்காக எதைஎதையோ விடாது செய்து கொண்டிருக்கும் இந்த சமூகம் மெல்லமெல்ல இந்த பூமியை அழித்துவிடும்.

 • சத்குரு: சுவாசமே உங்களை உங்கள் உடலுடன் பிணைக்கும் நூலிழையாகும். உங்களுடைய சுவாசத்தை நீக்கிவிட்டால், நீங்களும் உங்கள் உடலும் தனித்தனி ஆகிவிடுவீர்கள். இந்த சுவாசமே உங்களை உங்கள் உடலுடன் பிணைத்து வைத்துள்ளது. நீங்கள் எதை உடல் என்று அழைக்கிறீர்களோ, எதனை ''நான்'' என அழைக்கிறீர்களோ, இவை இரண்டும் சுவாசத்தால்தான் பிணைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் இந்த சுவாசமே, உங்களைப் பற்றிய பல அம்சங்களை முடிவு செய்கிறது.

  உங்கள் எண்ணத்திற்கும் உணர்வுநிலைக்கும் ஏற்ப உங்கள் சுவாசமும் பலவிதமாக மாறுகிறது. நீங்கள் கோபமாக இருந்தால், ஒருவிதமாக சுவாசிப்பீர்கள். அமைதியாக இருந்தால், இன்னொரு விதமாக சுவாசிப்பீர்கள். சந்தோஷமாக இருந்தீர்கள் என்றால், மற்றொரு விதமாக சுவாசிப்பீர்கள். சோகமாக இருந்தால் வேறு விதத்தில் சுவாசிப்பீர்கள். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

  இதன் அடிப்படையில்தான், பிராணாயாமம் மற்றும் கிரியாவின் விஞ்ஞானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வுடன், ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பதன் மூலம், நீங்கள் சிந்திக்கும் விதம், புரிந்துகொள்ளும் விதம், வாழ்வை உணரும் விதம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடியும்.

  இந்த சுவாசத்தை ஒரு கருவியாய் பயன்படுத்தி இந்த உடலோடும் மனத்தோடும் நாம் பல விஷயங்களைச் செய்ய முடியும். இந்த ஈஷா கிரியாவில் நாம் எளிமையான ஒரு சுவாசமுறையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஈஷா கிரியா, சுவாசம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. இங்கு சுவாசத்தை நாம் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான். அதாவது, சுவாசத்தை அடிப்படையாக வைத்துத் துவங்குகிறோம். ஆனால் பின்னர் நிகழ்வது சுவாசம் சம்பந்தப்பட்டதல்ல.

  நீங்கள் எவ்வாறு சுவாசிக்கிறீர்களோ, அவ்வாறே சிந்திக்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே சுவாசிக்கிறீர்கள். உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும், விழிப்புணர்வில்லாத மனமும், உங்கள் சுவாசத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் சுவாசிக்கும் முறையிலேயே உங்கள் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் அனைத்தும் எழுதப்பட்டுள்ளது.

  நீங்கள் இதனை உணர்ந்தீர்கள் என்றால் வாழ்க்கையே முற்றிலும் வேறு விதமான அனுபவமாக இருக்கும். இதை நீங்கள் உணர்ந்துதான் அறிந்து கொள்ள வேண்டும்; யாரோ ஒருவர் உங்களுக்கு உபதேசிப்பதன் மூலம் இதை நீங்கள் அறிய முடியாது. நீங்கள் இங்கே வெறுமனே அமர்ந்திருப்பதிலேயே ஆனந்தத்தை உணர்ந்தீர்கள் என்றால், எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், இங்கே வெறும் ஒரு உயிராய் அமர்ந்து இருப்பதன் மூலமே ஆனந்தத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால், வாழ்க்கை மிகவும் மாறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும்.

  இதற்கு என்ன அர்த்தம் என்றால்... ஒரு துளி மது கூட அருந்தாமல், ஒரு துளி போதைப் பொருள் கூட உட்கொள்ளாமல், எந்தப் பின்விளைவுகளும் இல்லாமல், உங்களுக்குள்ளே மிகுந்த போதை வயப்பட்டவராக நீங்கள் இருக்க முடியும். இதற்கு இன்று விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. Iநீங்கள் குறிப்பிட்ட விழிப்புணர்வு நிலையில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் இங்கே வெறுமனே உட்கார்வதே உங்களுக்கு பெரும் இன்பமாக இருக்கும்படி, உங்கள் உடல்மனக் கட்டமைப்பை நீங்கள் தூண்டமுடியும். வெறுமனே உட்கார்ந்து சுவாசிப்பதே ஆனந்தமாக ஆகிவிட்டால், நீங்கள் மிகவும் உற்சாகமாகவும், நெகிழ்வுடனும், அற்புதமாகவும் ஆகிவிடுவீர்கள். உங்கள் மனமும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகக் கூர்மையாக மாறும்.

 • சத்குரு: உங்கள் முகத்தை மேல் முகமாக வைப்பது, நீங்கள் ஆகாயத்தில் மிதக்கும் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்கோ அல்லது கற்பனை செய்துக் கொள்வதற்கோ அல்ல. நீங்கள் மேல் நோக்கி பார்க்கும்போது, உங்கள் முழு உடல்மனக் கட்டமைப்புமே "மேல்நோக்கி" பார்க்கிறது. அப்போது அது உள்வாங்கிக் கொள்ளும் திறனைப் பெறுகிறது. இது ஒரு ஜன்னலை திறப்பதைப் போன்றது. இது நாம் அருளைப் பெறுவதற்குத் தயாராவதைப் போன்றது. நீங்கள் விருப்பம் உடையவராகவும், உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உடையவராகவும் ஆகும் போது, உங்கள் உடல் இயல்பாகவே மேல் நோக்கி வளையும்.

 • சத்குரு: நீங்கள் 'ஆ' சப்தம் உச்சரிக்கும்போது உங்கள் உடலினுடைய பராமரிப்பு மையம் தூண்டப்படுகிறது. இது மணிபூரக சக்கரம் அல்லது தொப்புள் பகுதி. மணிப்பூரக சக்கரம் என்பது உங்கள் தொப்புளுக்கு முக்கால் அங்குலம் கீழே உள்ளது. நீங்கள் உங்கள் தாயின் கருப்பையில் இருந்தபோது உங்களுடைய பராமரிப்புக் குழாய் இங்குதான் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழாய் இப்போது இல்லையென்றாலும், பராமரிப்பு மையம் உங்களின் தொப்புளில்தான் உள்ளது.

  உங்களுக்கு, ஸ்தூல உடல் ஒன்று இருப்பது போல, சக்தி உடல் ஒன்றும் உள்ளது. இந்த சக்தியை நாம் பிராணா என்கிறோம். இந்தப் பிராணா, உடலில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட சில அமைப்புகளின் மூலமாக உடல் முழுவதும் நகர்கிறது. இது தாறுமாறாக நகர்வதில்லை. மொத்தம் 72,000 வழிகளில் அது நகர்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், இந்த உடலில் உள்ள 72,000 பாதைகள் வழியாக இந்த சக்தி பாய்கிறது எனலாம். இந்தப் பாதைகள் அல்லது வழித்தடங்கள்தான் நாடிகள் எனப்படுகின்றன. இந்த நாடிகள் ஸ்தூலநிலையில் இல்லை. இந்த உடலை அறுத்துப் பார்த்தால் அந்த நாடிகளை உங்களால் அங்கு பார்க்க முடியாது. நீங்கள் விழிப்புணர்வில் வளர, வளர உங்கள் சக்தி ஏனோதானோவென்று நகர்வதில்லை; அது நிர்மாணிக்கப்பட்ட பாதைகளில்தான் செல்கிறது என்பதை அறிவீர்கள்.

  'ஆ' சப்தத்தின் அதிர்வுகள் மட்டுமே உடல் முழுவதும் பரவக்கூடியதாய் உள்ளது, ஏனெனில், மணிப்பூரக சக்கரத்தில்தான் உடலின் 72,000 நாடிகளும் ஒன்று கூடிப் பிரிகின்றன. நீங்கள் 'ஆ' சப்தம் உச்சரிக்கும்போது, உங்கள் தொப்புளுக்கு முக்கால் அங்குலத்துக்குக் கீழிருந்து அதிர்வுகள் தொடங்கி உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும். இந்த அதிர்வு நம் உடலின் பராமரிப்பு மையத்தை சக்தியூட்டுவதற்கு உறுதுணையாய் இருக்கும். இந்த மையம் தூண்டப்படுவதன் மூலம் ஆரோக்கியம், வளம், ஆற்றல் மற்றும் நல்வாழ்வு கிடைக்கப் பெறும்.

 
 
ISHA FOUNDATION
Isha Foundation - © 1997 - 2022 Isha Foundation. All Rights Reserved.
Site MapFeedbackContact UsInternational Yoga DayGuru Purnima 2019 View our Privacy Policy