ஒரு மனிதர் தன் உள்நிலையில், உயர்நிலை சாத்தியக்கூறுகளை நோக்கி மேற்கொள்ளும் முயற்சிதான், மனிதரின் அனைத்துத் தேடல்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய தேடல்தான், மனிதராய்ப் பிறந்ததின் நோக்கத்தைப் பூர்த்தி செய்கிறது என்பதுடன், இது அனைத்து உயிர்களுக்கும் நன்மை தருவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் இயல்பாகவே உள்ள தேடுதலுக்கு தூண்டுகோலாகவும், உந்து சக்தியாகவும் இருந்து, அவர் தன் இறுதிநிலை சாத்தியத்தை உணர உதவுவதே ஈஷா அறக்கட்டளையின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது.
சத்குரு அவர்களால் 1992ம் வருடம் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படுகிற, உலகளாவிய, இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். மனித சக்தியைப் பண்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை, சகல மனிதர்களுக்குமான சேவை நிறுவனமாகச் செயல்பட்டு, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இன்னொருவரை வளப்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறது. மேலும் உரிய தூண்டுதல் அளித்து அதன் வழியே ஒரு தனிமனித மாற்றத்திற்குப் பாதையேற்படுத்துவதன் மூலம், உலகளாவிய ஆனந்த சமுதாயத்தை நிலைநிறுத்தப் பணிபுரிகிறது.
ஈஷா அறக்கட்டளை உலகெங்கிலும் சுமார் 150 நகரங்களுக்கும் மேல் கிளைகளைக் கொண்டு, 20,00,000 க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களுடன் செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை, தென்னிந்தியாவில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில், வளமான மழைக்காடுகளின் ஊடே அமைந்துள்ள ஈஷா யோக மையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், பிரமிக்கத்தக்க வனப்புடன் விளங்கும் கம்பர்லாண்ட் பீடபூமியில் அமைந்துள்ள ஈஷா உள்நிலை அறிவியல் நிறுவனம் என்ற அமைப்பின் பெயரிலும் செயல்படுகிறது.
யோக முறைப்படி வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகாவை பயிற்றுவிப்பது, அறக்கட்டளையின் முக்கியமான செயல்பாடாக உள்ளது. சக்தி வாய்ந்த, பண்டைக்கால யோக வழிமுறைகளிலிருந்து நவீன மனிதனுக்கு ஏற்ற வகையில் சாரமாக்கி வழங்கி, உடல், மனம் மற்றும் உணர்ச்சியில் உச்சபட்ச நலத்தினை உருவாக்குகிறது. இந்த அடிப்படையான முழுமையான நலன், ஒருவரின் உள்நிலை வளர்ச்சியை விரைவுபடுத்தி, அவருக்குள்ளே நிலைத்திருக்கின்ற உயிர்த்தன்மையின் அதிர்வை உணர்த்தி, வாழ்வில் வளம் பெற வழி செய்கிறது. சத்குரு வடிவமைத்துள்ள உள்நிலைப் பொறியியல், ஷாம்பவி மஹாமுத்ராவை வழங்குகிறது. ஒருவரின் ஆழமான உள்நிலை மாற்றத்திற்கான, எளிமையான, ஆனால் சக்தி வாய்ந்ததொரு கிரியாவாக சாம்பவி மஹாமுத்ரா திகழுகிறது.
ஈஷா அறக்கட்டளையானது, தனி மனித வளர்ச்சிக்கு உறுதுணை அளிக்கவும், மனிதத் தன்மைக்கு புத்துயிரூட்டவும், சமூதாயங்களை மறுசீரமைக்கவும், சுற்றுச்சூழல் நலத்தை நிலைநிறுத்தவும், பெரிய அளவிலான மனித நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அவற்றுள் சில:
-
கிராமப் புத்துணர்வு இயக்கம் ( www.ruralrejuvenation.org ),கிராமங்களுக்கான புத்துணர்வுத் திட்டமான இது, மருத்துவ வசதி, சமுதாய மறுவாழ்வு மற்றும் மனித மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை தென்னிந்தியாவில் மிகவும் பின்தங்கிய 2,500-க்கு மேற்பட்ட கிராமங்களில் நடைமுறைப் படுத்துகிறது.
- பசுமைக்கரங்கள் திட்டம் ( www.projectgreenhands.org), இந்தியாவின், தமிழ்நாட்டில், பொது மக்களின் ஒத்துழைப்புடன் 11.4 கோடி மரக்கன்றுகளை நட்டு, தமிழ்நாட்டின் பசுமைப்பரப்பை 33சதவிகிதமாக உயர்த்துவே பசுமைக்கரங்கள் திட்டம்.
- ஈஷா வித்யா ( www.ishavidhya.org), நகரத்து மாணவர்களுக்கு இணையாக, கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வியைப்பெற இத்திட்டம் உதவுகிறது. கணிப்பொறியை அடிப்படையாகக் கொண்ட, ஆங்கில வழியிலான, கல்வியை இத்திட்டம் வழங்குகிறது. தமிழகத்தில், வட்டத்திற்கு ஒன்றாக மொத்தம் 206 பள்ளிகளை நிறுவுவது நோக்கமாக இருக்கிறது.
அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலம் ஈஷா அறக்கட்டளை ஆற்றிவரும் பணிகள், உலகளவில், மனித சமுதாயத்திற்கு புத்துணர்ச்சிஅளிப்பதற்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
.

Free mobile health care