ஆஷாட மாதத்தில் (ஜுலை-ஆகஸ்ட்) வரும் பௌர்ணமி குரு பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பூமியில் அவதரித்து, உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்தநாள் அமைந்திருக்கிறது. 'குரு' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு 'இருளை விலக்குபவர்' என்று பொருள். குரு நம்மிடமுள்ள அறியாமையாகிய இருளை அகற்றி, ஞானோதய மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
குரு என்பவர் சாலை வரைபடம் போல என்கிறார் சத்குரு. குருவின் வழிகாட்டல் இல்லாமலும் ஒருவர் தான் போய் சேர வேண்டிய இலக்கை அடையலாம். ஆனால் நீண்ட காலங்கள் அதற்காக செலவிட நேரும். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் தத்தம் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர்.