பசுமைக்கரங்கள் திட்டம்
ஈஷா அறக்கட்டளையின், சுற்றுச்சூழல் முயற்சியான பசுமைக்கரங்கள் திட்டம், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து நிறுத்தவும், வாழ்வியலுக்கான சூழலை மேம்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் உறுதுணையோடு, தமிழ்நாடு முழுவதும், 11.4 கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, மாநிலத்தின் பசுமைப்பரப்பை மேலும் 10 சதவிகிதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் முதல்படியாக 2006 அக்டோபர் 17-ம் தேதியன்று, மரக்கன்றுகள் நடும் திட்டம், பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது. அன்று ஒரே நாளில், மாநிலத்தின் 27 மாவட்டங்களில், 6,284 இடங்களில், 2,56,289 தன்னார்வத் தொண்டர்கள், 8,32,587 மரக்கன்றுகளை நட்டு, கின்னஸ் சாதனை படைத்தனர். 2007ம் வருடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட மரக்கன்று நடும் பிரச்சாரத்தின் மூலமாக, இதுவரை 71 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் விவசாயக் காடுகள் வளர்க்கும் நடைமுறையும், விவசாயிகளிடையே, அறிமுகமாகியுள்ளது. அதிகமான உள்ளூர் கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவங்கள்(NGO), தொழில் நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களை மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் மற்றும் நடுதல் ஆகியவற்றில் ஈடுபடுத்த குறிக்கோள் கொண்டுள்ளது. தமிழக மக்களின் இந்த முயற்சியை நிறைவேற்றுவதற்காக, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் உதவியை, பசுமைக்கரங்கள் திட்டம், நாடுகிறது.
இத்தகைய மாபெரும் அளவிலான மரம் நடும் திட்டமானது பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துகிறது, மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது, சுற்றுச்சூழல் மற்றும் உயிரினச் சமன்பாடு நிலைக்கிறது. மேலும் மாநிலத்தில், பரவலாக ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதார வாய்ப்பளிக்கிறது. சுற்றுச்சுழலுக்கான அக்கறையை பண்பாட்டுக் கலாச்சாரமாகவே மாற்றுவதற்கான மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்துவதற்குத் திட்டமிடப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்து, உலகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்து, எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கேற்ற சிறந்த இடமாக, இந்த பூமியை மாற்றுவதே பசுமைக்கரங்கள் திட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது. .
இந்த திட்டம், பெரிய அளவிலான மாற்றம் நிகழ்வதில் தனிமனிதருக்கு உண்டான பொறுப்பையும், சக்தியையும் நிர்ணயம் செய்கிறது. சமுதாயக் கட்டமைப்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான உறவுநிலைகளை மேம்படுத்துதல், அரசு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் இருக்கிறது.