சுனாமி மீட்பு மற்றும் மறுவாழ்வு
2004-ஆம் வருடத்தின் டிசம்பர் மாதத்தில் 26-ம் நாளன்று தாக்கிய சுனாமிப் பேரலை ஏற்படுத்திய எதிர்பாராத கோர மரணங்கள் மற்றும் அழிவுகளால் துயருற்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட, தமிழக கடலோர மாவட்டங்களில் ஏற்கெனவே செயலாற்றிக் கொண்டிருந்த ஈஷா மையங்கள், வெகு வேகமாக முன்வந்தது. சிதம்பரம், கடலூர் மற்றும் பெரும் நாசங்களைச் சந்தித்த வெள்ளங்கோவில் மற்றும் நாகப்பட்டினம் கிராமங்களில் வாழ்வின் அனைத்து மட்டங்களிலுமுள்ள ஆயிரக்கணக்கான ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மீட்பு முகாம்களை முதல் நாளிலிருந்தே இயக்கினர். அதன் மூலம் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உணவு, தங்குமிடம், தரமான மருத்துவ உதவி மற்றும் பாதிக்கப்பட்டோரின் மனநலன் மீட்க மனோதத்துவ முறையிலான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டன. அழிவின் பாதிப்பிலிருந்து மீண்டு எழுவதற்காக என்றே, அவர்களுக்கு, தனியாக வடிவமைக்கப்பட்ட ஈஷா யோக வகுப்புகள் நிகழ்த்தி, உடல்ரீதியான, மனோரீதியான வலிமையைத் தரக்கூடிய கருவிகள் வழங்கப்பட்டன.
மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் நேரடியாக பங்கேற்கும் முகமாக
சத்குரு பலமுறை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தேவையான வழிகாட்டுதல்களைக் கொடுத்தும், அவற்றை மேற்பார்வையிட்டும் வந்தார். ஒரு முழுமையான மருத்துவர் குழு மற்றும் மருந்துகளோடு 8 நடமாடும் மருத்துவமனைகளும், ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரணப் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றியதில் ஈஷா அறக்கட்டளை நான்கு கிராமங்களைத் தத்தெடுத்து, ஒரு மாதிரி மறுவாழ்வுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியது. அதனால் பயன்பெற்றவர்கள் மற்றும் மாநில நிர்வாகத்தினரால் ஒருங்கே பெரும் பாராட்டைப் பெற்றது. மேலும் 60 கடலோர கிராமங்களில் கிராமப்புத்துணர்வுத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, நடமாடும் மருத்துவமனைகள் நிரந்தரமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
சுனாமி பேரழிவு நிகழ்ந்த 30 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர வீடுகளைக் கட்டி முடித்து முதன்முதலில் ஈஷா அறக்கட்டளை வழங்கியது. சத்குரு அவர்களாலேயே புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிட அமைப்புடைய வீடுகள் நெருப்பு, பூகம்பம், புயல், சுனாமி அலை ஆகியவற்றை எதிர்த்து நிற்கவல்லதாக பல நிறுவனங்களும் சான்றிதழ் அளித்துள்ளன. மேலும் கடலோரக் கிராமத்தினரின் ஒரே வாழ்வதாதாரமாக விளங்கும் படகுகளின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக படகு தயாரிக்கும் கட்டுமானப் பிரிவு ஒன்று, ஈஷா யோக மைய வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. பேரழிவினால் இழந்து விட்ட படகுகளை உருவாக்குவதில் தன்னார்வம் மிக்க பொறியாளர்களும் மற்றும் அது தொடர்பான தொழில் முனைவோரும் பெருமளவு உதவி செய்தனர்.
ஒரு பிரமாண்ட அளவிலான மரம் நடும் திட்டம் மற்றும் பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலமாக பசுமைப்பரப்புகள் உருவாக்கும் செயல் முறைகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று வரையிலும் இயங்கிக் கொண்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளையின் சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த மேலும் விவரமான தகவல்களுக்கு: www.ruralrejuvenation.org/relief.